தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர்.

அப்போது, ராஜபாளையத்தைச் சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், தனது கணவருடன் வந்து  மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அந்தப் பெண் கூறியிருப்பதாவது: “கடந்த 2023-ஆம் ஆண்டு எனது கணவர் ஒரு புகார் அளிப்பதற்காக புளியங்குடி காவல் நிலையத்திற்குச் சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலர் ஒருவர், எனது கணவரின் செல் பேசியைப் பிடுங்கி வைத்துக் கொண்டு அவரை அனுப்பிவிட்டார்.

பின்னர், அந்த செல்பேசியில் இருந்த எனது எண்ணைக் கண்டறிந்த அந்த காவலர், எனக்குத் தொடர்ந்து ஆபாச வீடியோக்களை அனுப்பத் தொடங்கினார். கடந்த 2024 செப்டம்பர் மாதம் வரை ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி எனக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்து எனது கணவர் காவல் நிலையத்தில் நேரில் புகாரளித்தும், போலீஸார் அதனைப் பெற மறுத்ததுடன், எனது கணவரை மிரட்டியுள்ளனர். கடந்த டிசம்பர் 11, 2025 அன்றும் மீண்டும் அந்த காவலர் எனது எண்ணிற்கு ஆபாச வீடியோக்களை அனுப்பினார். இதற்கான ஆதாரங்களை  நான் சேகரித்து வைத்துள்ளேன்.” உயரதிகாரிகளுக்குப் பதிவுத் தபால் மூலம் புகார் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் பெண் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் கமல் கிஷோர், இந்தப் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.