சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, பார்ப்பவர்களை வியக்க வைப்பதோடு மட்டுமன்றி, சமூகத்தின் ஒரு கசப்பான உண்மையை முகத்தில் அறைந்தாற்போலத் தெரிவிக்கிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் மிக நேர்த்தியாக பேண்ட் மற்றும் சட்டை அணிந்து கொண்டு சந்தை பகுதிக்குள் நுழைகிறார். பார்ப்பதற்கு ஒரு சாதாரண நடுத்தர வர்க்க மனிதரைப் போலத் தெரியும் அவர், சில நிமிடங்களில் செய்யப்போகும் மாற்றம் எவரும் எதிர்பாராதது. ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், தான் அணிந்திருந்த நல்ல உடைகளை ஒவ்வொன்றாகக் கழற்றிவிட்டு, கிழிந்த கோலத்திற்குத் தன்னை மாற்றிக் கொள்கிறார்.
வெறும் சில நொடிகளில், நடக்க முடியாத ஒரு மாற்றுத்திறனாளி போலத் தனது உடல் மொழியை மாற்றிக்கொண்டு அவர் சாலையில் அமர்வது, அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. ‘ராஜ் கீ பாத்’ (raj_kii_baat) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, பிச்சை எடுப்பது என்பது ஒரு திட்டமிடப்பட்ட தொழில்முறை வருமானமாக மாறிவிட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய போலி வேடதாரிகளால், உண்மையிலேயே உதவி தேவைப்படும் ஏழைகள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைந்து வருவது வேதனையான விஷயம். நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை “லெவல்-1 ஆக்டிங்” என்றும், “வேலைக்கு லாகின் செய்கிறார்” என்றும் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
