அபிஷேக் ஷர்மாவின் இந்த மோசமான ஃபார்ம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு பெரும் விவாதத்தையே கிளப்பியுள்ளது. அகமதாபாத்தில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலாவது ரன் கணக்கைத் தொடங்குவார் என்று பார்த்தால், மூன்றாவது முறையாக ‘முட்டை’ எடுத்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அந்த ராசி இல்லாத சூழலை மாற்ற முகமது சிராஜின் ஜெர்ஸியை அணிந்து வந்து அவர் செய்த விசித்திரமான முயற்சி, சோசியல் மீடியாவில் ஒரு பக்கம் கிண்டலுக்கும், மறுபக்கம் அனுதாபத்திற்கும் ஆளாகியுள்ளது. தொடர்ச்சியாக மூன்று முறை ‘டக் அவுட்’ ஆகி வெளியேறிய அபிஷேக்கின் ஆட்டத்தைப் பார்த்த வர்ணனையாளர்கள் ஆகாஷ் சோப்ரா, ஹர்பஜன் சிங் போன்றோரே தலையில் அடித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

​தற்போது இந்திய அணி ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், அபிஷேக் ஷர்மாவின் இந்தத் தொடர் தோல்விகள் அணி நிர்வாகத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பு ரசிகர்கள் அவர் வெறும் ‘பிளைண்ட் ஸ்லாகர்’ (கண்மூடித்தனமாக அடிப்பவர்) என விமர்சித்தாலும், சஞ்சு சாம்சனின் ரசிகர்கள் அவரை அபிஷேக்குடன் ஒப்பிட்டு “சஞ்சு எவ்வளவோ மேல்” எனப் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். ஆசியக் கோப்பையில் அதிரடி காட்டிய அபிஷேக், உலகக்கோப்பை போன்ற ஒரு பெரிய மேடையில் தனது டெக்னிக் குறைபாடுகளால் அம்பலமாகிவிட்டாரா? என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. சூப்பர் 8 சுற்றிலாவது அவர் மீண்டும் கர்ஜிப்பாரா அல்லது பெஞ்சில் அமரவைக்கப்படுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.