மத்தியபிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தைச் சேர்ந்த உஷா தேவி மற்றும் புவேந்திர பச்சவுரி தம்பதிக்கு குழந்தையில்லாததால், இருபது ஆண்டுகளுக்கு முன் குவாலியர் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து ‘தீபக்’ எனப் பெயரிட்டு வளர்த்தனர்.
வளர்ப்பு பெற்றோரின் அன்பிலும் பாதுகாப்பிலும் வளர்ந்த தீபக், 2021ம் ஆண்டு தனது வளர்ப்பு தந்தை இறந்ததையடுத்து அவரது வைப்புத் தொகையான ரூ.16.85 லட்சத்தை எடுத்துக்கொண்டு சொகுசான வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்.
இதனையடுத்து தனது வளர்ப்பு தாயான உஷா தேவியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.32 லட்சத்தை பெற திட்டமிட்டார். ஆனால் அதற்கு உஷா தேவி மறுப்பு தெரிவித்ததால், தீபக் கடந்த ஆண்டு மே மாதம் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். முதலில் மாடிப்படி ஏறியபோது கீழே தள்ளினார். ஆனால் அதில் உயிரிழப்பதற்குள் பிழைத்து வந்த தாயை பின்னர் இரும்புக் கம்பியால் தாக்கியும், கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்தார். பிறகு அவரது உடலை வீட்டு சுவரில் மறைத்து வைத்து, போலீசில் ‘தாயை காணவில்லை’ என போலியான புகார் அளித்தார்.
தொடர்ந்த போலீஸ் விசாரணையில் பல உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. வளர்ப்பு தாயையே கொலை செய்துள்ளதற்காக தீபக்கை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ஷியோபூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி எல்.டி. சோலங்கி தலைமையிலான கூடுதல் அமர்வு நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302-ன் கீழ் தீபக்கை குற்றவாளி என தீர்மானித்து, தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பில், “ஒரு தாய் என்பது இந்திய பாரம்பரியத்தில் கடவுளுக்கு ஒப்பானவர். அந்த அளவிற்கு மதிக்கப்படும் தாயை கொல்லும் செயலுக்கு மன்னிப்பு இல்லை. சமூகத்தில் ஒரு எதிர்மறை ஏற்படுத்தும் செயலுக்கு இதுதானே தகுந்த தண்டனை” என நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இந்த கொடூரமான சம்பவம் ஊரில் மட்டுமின்றி நாடு முழுவதும் ஆவேசத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
