மத்திய அரசு ஊழியர்கள் தங்களது வயதான பெற்றோரை பராமரிக்க, ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு பெறலாம் என மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

பெற்றோரை கவனித்தல் உள்ளிட்ட தனிப்பட்ட தேவைகளுக்காக இந்த விடுப்பை பயன்படுத்தலாம். இது குறித்து மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், 1972 ஆம் ஆண்டு மத்திய சிவில் சர்வீசஸ் (விடுப்பு) விதிகளின் கீழ் இந்த உரிமை வழங்கப்படுகிறது எனவும் கூறினார்.

ஊழியர்கள் ஆண்டுக்கு 30 நாட்கள் சம்பாதித்த விடுப்பு, 20 நாட்கள் அரை ஊதிய விடுப்பு, 8 நாட்கள் தற்செயல் விடுப்பு மற்றும் 2 நாட்கள் கட்டுப்படுத்தப்பட்ட விடுப்புகளை பெறலாம். இந்த அனைத்து விடுப்புகளும், பெற்றோரின் உடல்நிலை குறைவாக இருந்தால் அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்தலாம். ஆண்கள் மற்றும் பெண்கள் என மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் இந்த சலுகையை பயன்படுத்தலாம் எனவும் அவர் விளக்கியுள்ளார்.

மேலும், அரசு செயல்திறனை மேம்படுத்த, பொதுமக்கள் குறைகளை தீர்க்க மேற்கொள்ளப்பட்ட CPGRAMS (Centralized Public Grievance Redress and Monitoring System) மையத்தின் மூலம் 2025ம் ஆண்டுக்குள் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், குறை தீர்க்கும் கால அவகாசம் 28 நாட்களிலிருந்து 16 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதனால் மக்களுக்கான அரசுத் துறை சேவைகளில் நேர்மை மற்றும் வேகமடைந்த தீர்வுகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.