ஆந்திர மாநிலத்தில் கருவுறுதல் சிக்கல்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, மக்கள்தொகையை மேம்படுத்தும் நோக்கில் மாநில அரசு புதிய திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது 12 சதவீதம் பெண்கள் கருவுற முடியாத சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
இதன் காரணமாக, செயற்கை கருத்தரிப்பு மையங்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. செயற்கை கருத்தரிப்புக்காக சுமார் ரூ.80 ஆயிரம் வரை செலவாகும் நிலையில், இந்த செலவுக்கான நிதியுதவியை அரசு வழங்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 3வது மற்றும் 4வது குழந்தைகளை பெற்றெடுக்க விரும்பும் பெண்களுக்கு ஊக்கமாக ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதேபோல், நான்கு குழந்தைகளை பெற்றுள்ள குடும்பங்களுக்கு சொத்து வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படவுள்ளது. இந்த திட்டங்களின் மூலமாக, குறைந்த மக்கள்தொகை வளர்ச்சியை சமநிலைப்படுத்துவது அரசின் நோக்கமாக இருக்கிறது. 2047-ஆம் ஆண்டுக்குள் முதியவர்கள் எண்ணிக்கை 23 சதவீதமாக உயரக்கூடும் என்பதால், அந்த நிலையை சமாளிக்கவும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மகப்பேறு விடுப்பும் தற்போது 6 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக நீட்டிக்கப்பட உள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பதற்காக பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும். விரைவில் இதனை வழிமுறைப்படுத்தும் புதிய சட்டமும் அமலுக்கு வரவுள்ளது. இந்த புதிய திட்டங்கள் ஆந்திரப் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
