தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பைச் சேர்ந்த நாகராஜ் (53), கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். அவரது மனைவி காலமான நிலையில், இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்களுக்குத் திருமணம் செய்து வைத்திருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சித்திரைவேலின் மகன் ஜெய்சங்கர் (27) டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 27 ஆம் தேதி, நாகராஜின் மகள் வழி பேத்தியின் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி, அவர் நேற்று முன்தினம் நண்பர்கள் மற்றும் பரிச்சயமானவர்களுக்கு மது விருந்து வைத்திருந்தார்.

இதனை அறிந்த ஜெய்சங்கர், தனக்கும் மது வாங்கித் தருமாறு நாகராஜிடம் கோரியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் மது விருந்துக்கு அழைக்காததுடன், மீண்டும் மது வாங்கித் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த ஜெய்சங்கர், தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து நாகராஜை  தாக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் அருகில் கிடைத்த உலக்கையால் அவரை சரமாரியாக அடித்ததாகவும் கூறப்படுகிறது.

கடுமையான காயங்களால் ரத்த வெள்ளத்தில் சரிந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்திற்குப் பிறகு ஜெய்சங்கர் அங்கிருந்து தப்பிச் சென்றார். தகவல் அறிந்ததும் சாத்தான்குளம்  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். நாகராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. தப்பியோடிய ஜெய்சங்கரை போலீசார் விரைவில் பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மது விருந்துக்கு அழைக்காத கோபத்தில் வியாபாரி கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.