ஹார்முஸ் ஜலசந்தி என்பது எதிரி நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளதாகவும், மற்ற நாடுகளுக்கு அது எப்போதும் திறந்தே இருக்கும் என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் இந்த வழியாகவே நடப்பதால், ஈரான் இதனை மூடியது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.

ஏற்கனவே இந்தியா, ரஷ்யா, சீனா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளின் கப்பல்கள் இந்த வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்திருந்த நிலையில், தற்போது ஆறாவது நாடாக மலேசியாவிற்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், ஈரான் அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மலேசியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல அனுமதி கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டத் தான் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும், ஈரானின் பாதுகாப்பு குறித்து முறையான உத்தரவாதம் இல்லாததே அந்த நாடு தயக்கம் காட்டுவதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை அனுமதிக்கப்பட்ட ஆறு நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளின் கப்பல்கள் இந்த வழியாகச் செல்ல ஈரான் சுங்கம் வசூலிக்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.