மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் போர் ஆயத்தம் என ‘இரட்டை ஆட்டத்தை’ ஆடி வருவது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் வளங்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க டிரம்ப் விதித்திருந்த காலக்கெடுவை ஏப்ரல் 6-ம் தேதி வரை 10 நாட்கள் நீட்டித்துள்ளார். ஆனால், அதே சமயம் ஈரானை நிலைகுலையச் செய்ய மத்திய கிழக்கிற்கு கூடுதலாக 10,000 தரைப்படை வீரர்களை அனுப்ப பென்டகன் அதிரடித் திட்டத்தைத் தீட்டியுள்ளது.

ஒருவேளை ஏப்ரல் 6-க்குள் ஈரான் பணிந்து வரவில்லை என்றால், அந்நாட்டின் ஒட்டுமொத்த எரிசக்தி கட்டமைப்பையும் நிர்மூலமாக்கிவிடுவோம் என டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை போர்க்களத்தில் அனலைக் கூட்டியுள்ளது.

இந்த மோதலில் அமெரிக்கா முதல்முறையாகப் பிளாக்ஸீ (BlackSea) நிறுவனத்தின் GARC ஆளில்லா படகுகளை  உளவு மற்றும் தாக்குதல் பணிகளுக்காகப் பயன்படுத்தியுள்ளதை பென்டகன் ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28 அன்று பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி உட்பட 40 மூத்த தளபதிகள் கொல்லப்பட்ட சம்பவம் ஏற்கனவே ஈரானைப் பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது 10,000 கூடுதல் வீரர்களின் வருகை மற்றும் ஆளில்லா நவீன படகுகளின் பயன்பாடு ஆகியவை ஈரானைச் சுற்றி வளைக்கும் அமெரிக்காவின் தந்திரோபாயமாகப் பார்க்கப்படுகிறது. டிரம்பின் இந்த அதிரடி நகர்வுகள் மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான உலகப் போருக்கு வழிவகுக்குமா என்ற அச்சம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.