ஒரே நேரத்தில் பல முனைப் போர்களை எதிர்கொண்டு வரும் இஸ்ரேலிய ராணுவம் (IDF), கடுமையான ஆள் பற்றாக்குறையால் முடங்கும் அபாயத்தில் இருப்பதாக அந்த நாட்டு ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எயல் ஜமீர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய எயல் ஜமீர், ராணுவத்தின் தற்போதைய நிலை குறித்துப் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அதாவது இஸ்ரேலிய ராணுவம் தனக்குள்ளேயே சரிந்து விழுவதற்கு முன்பாக, நான் 10 அபாய எச்சரிக்கைகளை விடுக்கிறேன். 900 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போரிட்டு வரும் நமது படைகள், தற்போது தாங்க முடியாத அழுத்தத்தில் உள்ளன,” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.
இஸ்ரேலிய ராணுவம் சந்தித்து வரும் இந்த இக்கட்டான சூழலுக்குப் பின்வரும் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதன்படி காசா, லெபனான், சிரியா, ஈரான் மற்றும் மேற்குக் கரை என அனைத்துப் பக்கங்களிலிருந்தும் இஸ்ரேல் அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகிறது. இதனால் ஓய்வின்றிப் போரிட வேண்டியுள்ளது.
இஸ்ரேலில் உள்ள ‘ஹரேடி’ எனப்படும் தீவிர பழமைவாத யூதர்களுக்கு ராணுவச் சேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களைக் கட்டாய ராணுவச் சேவையில் சேர்க்கும் சட்டம் இதுவரை இயற்றப்படாததால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ராணுவத்திற்கு வருவதில்லை.
மேற்குக் கரையில் யூதக் குடியிருப்புகள் மற்றும் பண்ணைகளுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால், அவற்றைப் பாதுகாக்கக் கூடுதல் பட்டாலியன்கள் தேவைப்படுகின்றன. அங்கு அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்தப் பெரும் படைப்பிரிவு முகாமிட வேண்டியுள்ளது.
ராணுவத்தின் கோரிக்கைக்கு மாறாக, கட்டாய ராணுவச் சேவைக் காலத்தை 36 மாதங்களிலிருந்து 30 மாதங்களாகக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது ராணுவத்தின் பலத்தை மேலும் குறைக்கும் என அஞ்சப்படுகிறது. அரசியல் காரணங்களுக்காக, கட்டாய ராணுவச் சேவை மற்றும் காப்புப் படைகள் தொடர்பான சட்டங்களை நிறைவேற்ற அரசு தயங்குவதாகத் தளபதி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அமைதிக்காலத்தில்கூட கூடுதல் படைகள் தேவைப்படும் சூழலில், தற்போது நிலவும் போர்ச் சூழலை எதிர்கொள்ளத் தேவையான சட்டங்களை உடனடியாக இயற்றாவிட்டால், இஸ்ரேலின் பாதுகாப்புப் அரண் பலவீனமடையும் என பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
