பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு சீனாவின் அதிநவீன ‘டாக்கிங்’ போர்க்கப்பல் வந்தடைந்துள்ளது. ஈரான் எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தான் கடற்படைகள் இணைந்து நடத்தும் இந்தப் போர் பயிற்சி சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது.

பாகிஸ்தான் மற்றும் சீனக் கடற்படைகளுக்கு இடையிலான இருதரப்பு கடல்சார் கூட்டுப் பயிற்சியான ‘சீ கார்டியன்-4’ (Sea Guardian IV), கடந்த மார்ச் 25-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் நான்காவது பதிப்பான இந்தப் பயிற்சியில் பங்கேற்பதற்காகவே சீனப் போர்க்கப்பல் கராச்சி வந்துள்ளது. இக்கப்பலுக்கு பாகிஸ்தான் கடற்படை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தற்போது ஈரானில் கடும் போர் நடைபெற்று வரும் நிலையில், அதன் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு சீனப் போர்க்கப்பல் வந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்காவிற்கு எதிராக ஈரானுக்கு சீனா மறைமுகமாக உதவக்கூடும் என்ற விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்தப் பயணம் தற்செயலானது என்று கூறப்பட்டாலும், உலக நாடுகளின் கவனிப்பைப் பெற்றுள்ளது.

இதன் முக்கிய நோக்கமாக  இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும், கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதும் ஆகும். அதோடு  இளநிலை அதிகாரிகளுக்கான கருத்தரங்குகள், நிபுணர்களுடனான ஆலோசனைகள் மற்றும் பீரங்கிச் சூடு (Gunnery Firing) உள்ளிட்ட பயிற்சிகள் இதில் இடம்பெறுகின்றன. அரபிக்கடல் பகுதியில் இரு நாட்டுப் படைகளும் இணைந்து ரோந்துப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன.

மேலும் பாகிஸ்தானின் மிகப்பெரிய ஆயுத விநியோகஸ்தராக சீனா உருவெடுத்துள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் கடற்படை மற்றும் விமானப் படைக்குத் தேவையான நவீன போர் விமானங்களையும், கப்பல்களையும் சீனா தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்தப் போர் பயிற்சியானது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.