அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பும், பின்னர் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் அதிமுக உள்நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நீக்க நடவடிக்கைக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். இதேசமயம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அண்ணாமலை இருந்தவரை NDA கூட்டணி சரியாக இருந்ததாகவும், நயினார் நாகேந்திரன் தலைமையில் சரியில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாததால் தான் NDA கூட்டணியில் இருந்து வெளியேறியதாக தினகரன் விளக்கம் அளித்தார்.
இந்த சூழ்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன், “தினகரன் வெளியேறியது எனக்கு சம்பந்தம் இல்லை. தினகரன் மற்றும் ஓபிஎஸை நேரில் சந்தித்து கூட்டணி குறித்து பேசத் தயார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தான் இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை அமித்ஷா முன்னிலையில் அண்ணாமலை கூறியிருந்தார்.
அண்ணாமலை கூட்டணியை சரியாக கையாண்டார் என்கிற தினகரன் இதற்கு என்ன பதில் சொல்கிறார்?” எனக் கேள்வி எழுப்பினார். இதன் மூலம், தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
