மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்காக மின் வாரிய அலுவலகங்களில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், தேவையற்ற ஆவணக் கோரிக்கைகள், அலுப்பூட்டும் அலையாடல்கள், லஞ்சக் கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், தமிழக மின்வாரியம் புதிய நடைமுறையை அறிவித்துள்ளது.

பெயர் மாற்றத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தும், சொத்து வரி ரசீது, நோட்டரி ஆவணங்கள், சமையல் எரிவாயு ரசீது, ஆதார் நகல் உள்ளிட்ட  ஆவணங்களை கோரப்படுவது, மற்றும் வேலை செய்ய லஞ்சம் கோரப்படுவது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பெரும் புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து, மின் வாரிய இணையதளத்தில்தான் இவ்விதமான சேவைகளுக்கான விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும், ஒருமித்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் மக்களிடையே கோரிக்கை உருவானது. இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வணிகப் பிரிவு தலைமைப் பொறியாளர் புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:  “வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகமான ஆவணங்கள் கோருவதால் பெயர் மாற்ற செயல்முறையில் தாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் படிவம் 2 என்பதைக் கேட்கும் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது.”

பெயர் மாற்றத்துக்கு தேவையான முக்கிய ஆவணங்கள்:

விற்பனை, பரிசளிப்பு, பங்கு பிரிப்பு போன்ற காரணங்களுக்காக பெயர் மாற்றம் செய்யும் போது:

விற்பனை பத்திரம் / பரிசளிப்பு ஆவணம்

சொத்து வரி ரசீது (அண்மைய)

நீதிமன்ற தீர்ப்பு (தேவைப்பட்டால்)

முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் கடிதம் (அல்லது உரிய ஆதாரங்கள்)

உரிமையாளர் மரணமடைந்தால்:

தாசில்தார் வழங்கிய வாரிசு சான்றிதழ்

அல்லது அண்மை கால சொத்து வரி ரசீது + இழப்பீடு பத்திரம்

இதுபோன்ற நிலைகளில், தேவையான ஆவணங்களை மட்டுமே கோரி, பெயர் மாற்றத்தைச் செய்ய மாவட்ட அளவிலான பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு தெளிவாக தகவல் வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு தாழ்வழுத்த (LT) பிரிவில் பெயர் மாற்றத்துக்கான கட்டணம் ₹645 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இணையதளம் வழியாக செலுத்த வேண்டும். மேலும்  “உங்களுடன் ஸ்டாலின் காம்களில் வரும் விண்ணப்பங்களுக்கும் தற்போது நிர்ணயிக்கப்பட்ட இந்நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும்” என்று, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்வாரியம் உறுதியுடன் உத்தரவிட்டுள்ளது.