தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி மாற்றங்கள், வரவிருக்கும் 2026 தேர்தலை பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. அதிமுக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த புதிய தமிழகம் கட்சி, தற்போது அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தனித்துப் போட்டியிடப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, “NDA கூட்டணிக்கும் எங்களுக்கும் இனி எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைக்கான அழைப்பு வந்தால், அவர்களுடன் கூட்டணி அமைப்பது குறித்துப் பரிசீலிப்போம் என்றும் கூறி ஒரு புதிய அரசியல் திருப்பத்திற்கு வித்திட்டுள்ளார்.
முக்கியமாக, அதிமுகவின் பலம் குறித்து கிருஷ்ணசாமி முன்வைத்துள்ள விமர்சனம் எடப்பாடி தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. “தென் தமிழகத்தில் சுமார் 50 முதல் 60 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் கூட பெறாது” என்று அவர் சவால் விட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி முறிந்த வேகத்தில் அதிமுகவை இவ்வளவு கடுமையாக அவர் விமர்சித்திருப்பது, தென் மாவட்டங்களில் நிலவும் வாக்கு வங்கி அரசியலில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் எனத் தெரிகிறது. ஒருபுறம் தனித்து போட்டி, மறுபுறம் விஜய் தலைமையிலான தவெக-வுக்குப் பச்சைக்கொடி என கிருஷ்ணசாமியின் இந்த “மூவ்” தேர்தல் களத்தை இன்னும் சூடாக்கியுள்ளது.
