மும்பையில் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் பெண் ஒருவர், ஆன்லைன் ஷாப்பிங் மோசடியில் தனது உழைப்பில் சேர்த்த 1 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். முகநூலில் வெறும் 299 ரூபாய்க்கு ஆடை விற்கப்படுவதாக வந்த விளம்பரத்தைப் பார்த்த அந்தப் பெண், அதை வாங்க முயன்றுள்ளார்.
ஆனால், மர்ம நபர்கள் அவரிடம் ஆடையின் விலையைத் தவிர்த்து, ஷிப்பிங் கட்டணம், ஜிபிஎஸ் கட்டணம், டிராக் செய்யும் வசதி மற்றும் சரிபார்ப்பு கட்டணம் எனப் பல காரணங்களைக் கூறி அடுத்தடுத்து பணம் கேட்டுள்ளனர்.
கட்டிய பணம் மீண்டும் உங்களுக்கே வந்துவிடும் என்று அவர்கள் கொடுத்த பொய்யான வாக்குறுதியை நம்பி, ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 20 வரையிலான ஐந்து நாட்களில் அவர் மொத்தம் 1 லட்சம் ரூபாயை அந்த மோசடியாளர்களிடம் இழந்தார்.
ஆர்டர் செய்த ஆடை வராததைக் கண்டு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தச் செவிலியர், உடனடியாக 1930 என்ற சைபர் க்ரைம் உதவி எண்ணை அழைத்து புகார் அளித்தார். இது குறித்து தேவநார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாட்ஸ்அப் எண்கள் மற்றும் போலியான டெலிவரி ஏஜெண்டுகள் மூலம் இந்தத் மோசடி அரங்கேற்றப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெறும் 299 ரூபாய் விளம்பரத்தை நம்பி 1 லட்சம் ரூபாயைப் பறிகொடுத்த இந்தச் சம்பவம், ஆன்லைன் விளம்பரங்கள் விஷயத்தில் மக்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
