குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் குச்சி ஐஸ் மற்றும் ஐஸ்கிரீம்கள், எந்தவொரு சுகாதாரமும் இல்லாமல் மிகக் கேவலமான முறையில் அழுக்கு பக்கெட்டுகளிலும், ஈக்கள் மொய்க்கும் திறந்தவெளியிலும் தயாரிக்கப்பட்டு வந்த அதிர்ச்சி வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அந்த ஐஸ் கிரீம் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் அதிரடியாகச் சீல் வைத்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் (Indore) மாவட்டத்தில் உள்ள ‘சித்திவிநாயகர்’ என்ற ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை அன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்தத் தொழிற்சாலை முழுவதும் ஈக்கள் மொய்த்துக் கொண்டும், சாக்கடை மற்றும் குப்பைகளுக்கு நடுவிலும் மிகவும் அசுத்தமான முறையில் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
#WATCH | Indore, Madhya Pradesh: The Food Safety Department raided an ice cream factory operating under unsanitary conditions.
Indore Collector Shivam Verma says, “As per the Chief Minister’s instructions, the district administration is continuously taking action against… pic.twitter.com/hUijTsCHda
— ANI (@ANI) May 23, 2026
மேலும், ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கான மாவு மற்றும் மூலப்பொருட்கள் அனைத்தும் கழுவப்படாத அழுக்கு பக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி, பேக் செய்யப்பட்ட ஐஸ்கிரீம்கள் அனைத்தும் மூடி இல்லாமல் திறந்தவெளியில் அசுத்தமான சூழலில் வைக்கப்பட்டிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த அதிரடி நடவடிக்கை குறித்துப் பேசிய இந்தூர் மாவட்ட ஆட்சியர் (Collector) சிவம் வர்மா, “முதலமைச்சரின் உத்தரவின்படி, கலப்படம் செய்பவர்கள் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தத் தொழிற்சாலை முறையான அரசு உரிமம் (Licence) எதுவும் இல்லாமலும், அடிப்படைச் சுகாதார விதிகளைப் பின்பற்றாமலும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இயங்கியதால் உடனடியாக அதற்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
சோதனையின் போது அங்கிருந்த அனைத்துப் பொருட்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், ஐஸ்கிரீம் மாதிரிகளைச் சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
