மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) கடுமையான ஆள் பற்றாக்குறையினால் உள்ளிருந்தே சரிந்துவிடும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலிய ராணுவத் தளபதி எயால் ஜமீர், தனது நாட்டு அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கையை மேற்கோள் காட்டியே காலிபாஃப் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். காசா போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலிய ராணுவம் சுமார் 12,000 வீரர்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாகவும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் ராணுவக் கட்டமைப்பு சிதைந்துவிடும் என்றும் எயால் ஜமீர் கவலை தெரிவித்துள்ளார்.

தனது உள்நாட்டு பலவீனங்களை மறைக்கவே ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாகவும், இது இஸ்ரேலின் வீழ்ச்சியை மட்டுமே விரைவுபடுத்தும் என்றும் ஈரான் சாடியுள்ளது.

இஸ்ரேலில் நிலவி வரும் கட்டாய ராணுவ சேவை சட்டச் சிக்கல்கள், ராணுவத்தின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சுமார் 80,000 தீவிர பழமைவாத யூத இளைஞர்கள் ராணுவ சேவைக்குத் தகுதி பெற்றிருந்தும், அவர்கள் இன்னும் ராணுவத்தில் சேர்க்கப்படாதது பெரும் அரசியல் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இதனால் ராணுவ சேவை காலத்தை நீட்டிக்கவும், புதிய சட்டங்களை இயற்றவும் ராணுவத் தளபதி ஜமீர் கோரிக்கை விடுத்துள்ளார். ஒருபுறம் போர்க்களத்தில் ஈரானின் ஏவுகணைகளை எதிர்கொள்ளும் இஸ்ரேல், மறுபுறம் ஆள் பற்றாக்குறை மற்றும் உள்நாட்டு அரசியல் நெருக்கடியால் திணறி வருவது, அந்த நாட்டு ராணுவத்தின் பலவீனத்தையே காட்டுவதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஏப்ரல் 6-ஆம் தேதி டிரம்பின் கெடு முடிவடைய உள்ள நிலையில், இஸ்ரேலின் இந்த ராணுவ நெருக்கடி போரின் போக்கை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது.