ஈராக் மற்றும் சிரியா நாடுகளுக்கு இடையே சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த ‘ராபியா – யருபியா’ எல்லைக் கடக்கும் பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சிரிய உள்நாட்டுப் போர் காரணமாக 2011-ல் மூடப்பட்ட இந்தப் பாதை, தற்போது இரு நாட்டு அதிகாரிகளின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.

மேலும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவும் போர் பதற்றம் மற்றும் முடக்கநிலை காரணமாக ஆசிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாட்டைப் போக்க, இந்தப் பாதை ஒரு முக்கிய மாற்று வழியாகக் கருதப்படுகிறது. சிரியா வழியாக எண்ணெய் ஏற்றுமதியை மேற்கொள்ளவும், பிராந்திய வர்த்தகத்தை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தனது வருவாயில் 90 சதவீதத்திற்கு மேல் எண்ணெய் ஏற்றுமதியையே நம்பியிருக்கும் ஈராக்கிற்கு, இந்த எல்லைத் திறப்பு பொருளாதார ரீதியாகப் பெரும் பலனைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ள சூழலில், இந்த புதிய வழித்தடம் அண்டை நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வளர்ப்பதோடு, உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகவும் அமையும் என அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.