ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்துக்கள் உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் ஜோ பைடன் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்க வரலாற்றின் “மிக மோசமான ஒப்பந்தங்களில் ஒன்று” என்று டிரம்ப் விமர்சித்துள்ளார்.

மேலும் அந்த ஒப்பந்தம் ஈரானுக்கு அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான ஒரு எளிய பாதையை மட்டுமே அமைத்துக் கொடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போது தமது நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் புதிய ஒப்பந்தம் அதைவிடப் பல மடங்கு சிறந்ததாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இதனால் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ஈரானுடன் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் புதிய ஒப்பந்தம், ஒபாமா காலத்து ஒப்பந்தத்தை விட மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த புதிய உடன்படிக்கை இஸ்ரேல், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவின் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ஈரானின் அணுசக்தித் திட்டங்களை நிரந்தரமாகக் கட்டுப்படுத்துவதையும், அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்தப் புதிய நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் இந்த அதிரடி நிலைப்பாடு சர்வதேச அரசியலில் ஈரானுடனான உறவில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.