ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள சூழலில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் விடுத்துள்ள எச்சரிக்கை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் இருவார கால போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அமெரிக்கா மிரட்டல் விடுப்பதன் மூலம் பேச்சுவார்த்தை மேசையை “சரண் அடையும் மேசையாக” மாற்ற முயல்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள அவர், ஒருவேளை போர் மீண்டும் தொடங்கினால், போர்க்களத்தில் ஈரான் தனது புதிய வியூகங்களையும் வலிமையையும் வெளிப்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.
மறுபுறம், ஈரானுடனான அமைதி உடன்படிக்கை எட்டப்படும் வரை அந்நாட்டு துறைமுகங்கள் மீதான கடல்வழி முற்றுகை நீக்கப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிடிவாதமாகத் தெரிவித்துள்ளார். இந்த முற்றுகையினால் ஈரான் தினசரி பல மில்லியன் டாலர்களை இழந்து வருவதாகவும், ஈரான் பொருளாதார ரீதியாகப் பெரும் சரிவைச் சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் கப்பல் ஒன்றை அமெரிக்க கடற்படை சிறைபிடித்தது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று ஈரான் சாடியுள்ளது. இந்த மோதல் போக்கினால் வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதோடு, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.
