அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், தனது கல்லூரி மீது குண்டுகளை வீசுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கோரிக்கை விடுத்து வாட்ஸ்அப்பில் செய்தி பகிர்ந்த மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 20 வயதான கேப்ரியலா சல்டானா என்ற மாணவி, தனது வாட்ஸ்அப் குழுவில் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
மேலும் சக மாணவர்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்ததையடுத்து, மியாமி வளாகத்திற்கு அருகில் வைத்து அவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். காவல்துறையின் விசாரணையில், தான் விளையாட்டாகவே அந்தச் செய்தியைப் பதிவிட்டதாக மாணவி தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும், கல்வி நிறுவனங்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பான புளோரிடா மாகாணத்தின் கடுமையான சட்டங்களின் கீழ், இந்தச் செயலை அதிகாரிகள் தீவிரமான குற்றமாகப் பரிசீலித்தனர்.
இந்நிலையில் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் அல்லது அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய வகையில் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட அந்த மாணவி, தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறார்.
