காலையில் எழுந்தவுடன் அன்றைய பொழுதை உற்சாகமாகத் தொடங்க நினைப்பவர்களுக்கு மத்தியில், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 36 வயது பெண் எரிகா மேஸின் வாழ்க்கை ஒரு விபரீத கனவாக மாறியுள்ளது.
ஒருநாள் காலை தூங்கி எழுந்த எரிகா, தனது நெஞ்சுக்கு கீழே உள்ள உடல் பாகங்கள் முழுமையாகச் செயலிழந்து, கல்லைப் போல மரத்துப் போயிருப்பதை உணர்ந்து அதிர்ச்சியில் உறைந்தார்.
ஏதோ நரம்புப் பிடிப்பு என்று நினைத்து சுடுதண்ணீர் ஊற்றிப் பார்த்தும் பலன் இல்லாத நிலையில், மருத்துவமனைக்குச் சென்ற அவருக்குக் காத்திருந்தது பேரதிர்ச்சி.
ரத்தத்தில் பரவிய ஒரு அபாயகரமான பாக்டீரியா தொற்று, அவரது முதுகெலும்பைத் தாக்கி ஒரு கட்டியை உருவாக்கியதே இந்த நிலைக்குக் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முன்பு ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளராகவும், உணவக மேலாளராகவும் துடிப்போடு வலம் வந்த எரிகா, போதைப் பழக்கத்தால் வீடிழந்து பாலத்தின் அடியில் தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அந்தச் சூழலில்தான் இந்தத் தொற்று அவரைத் தாக்கியுள்ளது. தற்போது முதியோர் இல்லம் ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்று வரும் அவர், தனது போராட்டத்தை டிக்-டாக் தளம் வழியாக உலகுக்குத் தெரிவித்து வருகிறார்.
இரண்டு முறை தற்கொலைக்கு முயன்ற போதிலும், இப்போது மன உறுதியோடு மீண்டு வரும் எரிகா, தன்னைப்போல ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களுக்காகக் குரல் கொடுத்து வருவது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
