ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்குச் செல்ல முயன்ற ‘டௌஸ்கா’ (Touska) என்ற சரக்குக் கப்பலை அமெரிக்கக் கடற்படை அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியைச் சுற்றி அமெரிக்கா விதித்துள்ள கடல்வழி முற்றுகையை மீறிச் செல்ல முயன்றதால், அந்த சரக்குக் கப்பலின் என்ஜின் அறையில் துளையிட்டு அமெரிக்கா அதைத் தடுத்து நிறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைச் “சர்வதேச கடற்கொள்ளை” என்று ஈரான் கடுமையாகச் சாடியுள்ளது. சர்வதேசச் சட்டங்களை மீறி இந்தக் கப்பல் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள கப்பல் ஊழியர்களை உடனடியாக விடுவிக்க ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தலையிட வேண்டுமென்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தால் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
