கோடை வெயிலுக்கு இதமான இளநீர் மற்றும் கரும்புச் சாறு போன்ற இயற்கை பானங்களை அருந்துவது வழக்கம். ஆனால், வைரல் மோகத்திற்காகக் கரும்புச் சாற்றில் ‘மட்டர் பன்னீர்’ குழம்பைக் கலந்து ஒருவர் செய்துள்ள சோதனை, சமூக வலைதளங்களில் பெரும் கண்டனத்தைப் பெற்று வருகிறது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், நபர் ஒருவர் கரும்புச் சாறு எடுக்கும் இயந்திரத்தில், கரும்பைத் துண்டுகளுடன் சேர்த்து ‘மட்டர் பன்னீர்’ குழம்பையும் நேரடியாக ஊற்றுகிறார். கரும்புடன் சேர்ந்து பன்னீர் துண்டுகளும் அரைக்கப்பட்டு, சாறாக வெளியே வருகிறது. இதனைப் பார்த்த இணையவாசிகள், “இந்தச் சாற்றைக் குடிக்கும்போது சைடு டிஷ்ஷாக ரொட்டி வைத்துக் கொள்ள வேண்டுமா?” என நையாண்டியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “இது பிரபஞ்சத்தின் மோசமான உணவுப் பரிசோதனை” என்றும், “இதைப் பார்த்தாலே வாந்தி வரும் போலிருக்கிறது” என்றும் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர், “இன்னும் ஹார்பிக்கும், பினாயிலும் மட்டும்தான் சாற்றில் கலக்கப்படவில்லை” என ஆவேசமாகத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, மற்றொரு வீடியோவில் கரும்புச் சாற்றுடன் ‘சாஃப்டி’ ஐஸ்கிரீமைக் கலந்து ஒரு பானத்தைத் தயாரித்துள்ளனர். இதனைத் தயாரித்தவர்கள் ‘மிகவும் சுவையாகவும் க்ரீமியாகவும்’ இருப்பதாகக் கூறினாலும், பாரம்பரிய உணவுகளின் சுவையையும் தரத்தையும் சிதைப்பதாகவே உணவுப் பிரியர்கள் கருதுகின்றனர்.

வெறும் ‘வியூஸ்’ (Views) மற்றும் லைக்குகளைப் பெறுவதற்காகச் செய்யப்படும் இத்தகைய விபரீத மற்றும் அருவருக்கத்தக்க உணவுச் சோதனைகள், பாரம்பரிய உணவுகளின் மதிப்பைக் குறைப்பதாகப் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர். இதுபோன்ற செயல்களைச் செய்பவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இணையத்தில் எழுந்துள்ளது.