புதிய செல்போன் வாங்கித் தராததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், 20 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சிந்தலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சாய் குமார் (20). மதுப் பழக்கத்திற்கு அடிமையான இவர், சமீபத்தில் தனது செல்போனை கீழே போட்டு உடைத்துள்ளார். இதனால், தனது பெற்றோரிடம் புதிய செல்போன் வாங்கித் தருமாறு கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
சாய் குமாரின் பெற்றோர் தினக்கூலித் தொழிலாளர்கள் ஆவர். அன்றாடத் தேவைக்கே கஷ்டப்படும் நிலையில், உடனடியாகப் புதிய போன் வாங்கிக் கொடுக்கத் தங்களால் இயலாது என்று அவர்கள் மகனிடம் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த சாய் குமார், நேற்று முன்தினம் இரவு மீண்டும் மது அருந்திவிட்டுப் பெற்றோருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பெற்றோர் சமாதானப்படுத்த முயன்றும், அடங்காத சாய் குமார் நள்ளிரவில் அனைவரும் உறங்கிய பிறகு வீட்டின் ஒரு பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதிகாலையில் மகனின் உடல் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அலறித் துடித்தனர். இது குறித்துத் தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
செல்போன் மோகம் மற்றும் மதுப் பழக்கத்தால் ஒரு இளைஞர் தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இளைஞர்களிடையே அதிகரித்து வரும் செல்போன் அடிமைத்தனமும், மன அழுத்தமுமே இத்தகைய விபரீத முடிவுகளுக்குக் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
