கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், புதிய முதல்வரைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான ‘இந்திரா பவனில்’ நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வரும் எம்.எல்.ஏ.-க்களை வரவேற்பதற்காக காங்கிரஸ் முக்கிய பிரமுகர் செரியான் பிலிப் பிரதான வாயிலில் நின்றிருந்தார். அப்போது, கொல்லம் தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் மாநில மகிளா காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணா அங்கு வந்தார்.

அவரை வரவேற்க முற்பட்ட செரியான் பிலிப், திடீரெனப் பாய்ந்து அவரைக் கட்டியணைத்து முத்தம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பிந்து கிருஷ்ணா, அவரது கைகளைத் தட்டிவிட்டு அங்கிருந்து விலகிச் செல்ல முயன்றார். இருப்பினும், செரியான் பிலிப் விடாமல் மீண்டும் அவரை அணுக முயன்றது அங்கிருந்தோரை முகம் சுளிக்க வைத்தது.

இந்தச் சங்கடமான காட்சிகள் அங்கிருந்தவர்களின் செல்போனில் பதிவாகி, சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. ஆளுங்கட்சித் தரப்பைச் சேர்ந்த ஒருவரே, சக பெண் நிர்வாகியிடம் பொதுவெளியில் இத்தகைய அநாகரிகமான செயலில் ஈடுபட்டதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்ட செரியான் பிலிப் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கேரள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹபீஸ் என்பவர் மியூசியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெற்றி உற்சாகத்தில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு, இந்த விவகாரம் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.