தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியான நாஞ்சில் சம்பத், தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தனக்கே உரித்தான அடுக்குமொழிப் பாணியில் நாஞ்சில் சம்பத் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, வஞ்சகம், வன்மம், வக்ரம், அநீதி, அநியாயம், அக்ரமம், சூது, வாது, பொறாமை, அலட்சியம் மற்றும் அவதூறு ஆகிய படிகளைக் கடந்துதான் ஒரு கட்சி கரைசேர வேண்டும். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் அனைத்துத் தடைகளையும் தாண்டி தற்போது எதிர்நீச்சல் போட்டு வருகிறது.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அவர் மேலும் கூறுகையில், “நிலத்தை நிராகரித்துவிட்டு நதி நடக்க முடியாது; நீல வானத்தை அலட்சியப்படுத்திவிட்டு நிலவு சிரிக்க முடியாது. காற்றைக் கைது செய்துவிட்டு ஒரு கால் மணி நேரம் கூட மனிதன் உயிர்வாழ முடியாது. அதேபோல் தண்ணீரை மறுதலித்துவிட்டு தாகத்திற்கு விடை காண முடியாது; மின்சாரத்தைப் புறக்கணித்துவிட்டு புதிய உலகத்தைச் சமைக்க முடியாது.
மேலும், தமிழக அரசியலில் விஜய்யின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “தவெக-வையும், தளபதி விஜயையும் அலட்சியப்படுத்திவிட்டு அன்னைத் தமிழகத்தில் இனி யாரும் அரசியல் செய்ய முடியாது. நதிகள் நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது; தேதிகள் கிழிபட உடன்படாவிட்டாலும் நாளை என்பது நிச்சயம் நடக்கும்,” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக தவெக மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, நாஞ்சில் சம்பத் தனது பாணியில் கொடுத்துள்ள இந்த ‘பஞ்ச்’ பதிலடி இணையத்தில் வைரலாகி வருகிறது.
