அமெரிக்காவின் ரோட் ஐலேண்ட் மாகாணத்தில் உள்ள வெஸ்டர்லி பகுதியில், உறையும் பனிக்கட்டி குளத்தில் விழுந்த நாய் ஒன்றை தீயணைப்பு வீரர்கள் துணிச்சலாக மீட்ட நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஜனவரி 1-ஆம் தேதி காலை, ‘பீனிக்ஸ்’ என்ற பெயர் கொண்ட ஐந்து வயது கோல்டன் ரீவர் வகை நாய், தனது உரிமையாளருடன் நடைப்பயிற்சி சென்றபோது எதிர்பாராதவிதமாக லிட்டில் மசாசாக் என்ற பனிக்கட்டி குளத்திற்குள் விழுந்தது.

மேலும் கடும் குளிரில் நாய் தத்தளிப்பதைக் கண்ட மீட்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டு, பனி மீட்பு கவச உடைகளை அணிந்து குளத்திற்குள் இறங்கி அந்த நாயைப் பாதுகாப்பாக மீட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையில் மிஸ்குவாமிகட் மற்றும் வாட்ச் ஹில் ஆகிய இரண்டு தீயணைப்புத் துறைகளைச் சேர்ந்த வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.

இந்நிலையில் வைரலாகியுள்ள அந்த வீடியோவில், ஆரஞ்சு நிற உடை அணிந்த வீரர் ஒருவர் பனிக்கட்டியில் தவழ்ந்து சென்று நாய் குளிரில் விறைத்துப் போவதற்குள் அதைக் கையில் ஏந்தி கரைக்குக் கொண்டு வரும் காட்சிகள் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்களுக்கு உடல்வெப்பம் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது, ஆனால் அனைவரும் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டின் முதல் மீட்புப் பணியாக அமைந்த இந்தச் செயல், விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.