நவி மும்பையைச் சேர்ந்த அஜித் சிங் ரத்தோர் என்ற இளைஞரின் ஊக்கமளிக்கும் வாழ்க்கைப்பயணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 18 மாதங்களுக்கு முன்பு, அவர் ஒரு ஸொமாட்டோ டெலிவரி ஊழியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போது அவர் சந்தித்த அவமானங்கள் ஏராளம்; குறிப்பாக, கார்கர் பகுதியில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் உணவு வழங்கச் சென்றபோது, அவரது இருசக்கர வாகனத்தை உள்ளே நிறுத்தக்கூட அனுமதி மறுக்கப்பட்டது.
ஊழியர்களும் குடியிருப்பாளர்களும் அவரை மரியாதையின்றி நடத்திய அந்தத் தருணங்கள் அவரைப் பெரிதும் காயப்படுத்தின. ஆனால், இன்று அதே இடத்திற்கு அவர் தனது சொந்த நிறுவனத்தின் வாடிக்கையாளரைச் சந்திக்க ஒரு விலையுயர்ந்த எஸ்யூவி காரில் கெத்தாக நுழைந்துள்ளார். அன்று தடுத்த அதே பாதுகாப்புப் பணியாளர்கள் இன்று அவருக்கு ‘சல்யூட்’ அடித்து வரவேற்றது, அவரது கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
View this post on Instagram
“>
இந்த மாற்றத்தைப் பற்றி ஒரு வீடியோவில் பகிர்ந்துள்ள அஜித், “வாழ்க்கை கணிக்க முடியாதது; நாம் உழைக்கத் தயாராக இருந்தால் காலம் எல்லாவற்றையும் மாற்றும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். வெறும் ஒன்றரை ஆண்டுகளில் ஒரு சாதாரண டெலிவரி பாயிலிருந்து, கார்ப்பரேட் ஒப்பந்தங்களைப் பேசும் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக அவர் உயர்ந்திருப்பது பல இளைஞர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
மேலும் தற்காலிகமான பின்னடைவுகளையும் அவமானங்களையும் கண்டு துவண்டுவிடாமல், விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எவராலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியும் என்பதற்கு அஜித்தின் இந்த ‘வெற்றிப் பயணம்’ ஒரு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோ, உழைப்பின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறைக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
