ஹைதராபாத்: நவீன மருத்துவ உலகம் இவ்வளவு வளர்ந்த பிறகும், இந்தியாவின் சில விசித்திரமான பாரம்பரிய நம்பிக்கைகள் இன்றளவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், ஹைதராபாத்தில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘மீன் பிரசாதம்’ (Fish Prasadam) வழங்கும் நிகழ்ச்சி நடப்பு ஆண்டிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தோடு தொடங்கியுள்ளது.
ஹைதராபாத் பொருட்காட்சி திடலில் நடக்கும் இந்த விசித்திர நிகழ்விற்காக, இந்த ஆண்டு மட்டும் 1.30 லட்சம் முரல் (Murrel) வகை குட்டி மீன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சி தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 38,000-க்கும் மேற்பட்ட டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு, கிலோமீட்டர் தூரத்திற்குப் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.
பத்தினி கவுட் (Bathini Goud) குடும்பத்தினரால் கடந்த 178 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மீன் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. விரல் நீளமுள்ள ஒரு உயிருள்ள மீனின் வாய்க்குள், மஞ்சள் நிற ரகசிய மூலிகை மருந்தை வைத்து, அதை அப்படியே மக்களின் வாய்க்குள் போட்டு விழுங்கச் சொல்வதுதான் இந்த பாரம்பரிய முறை. இதை விழுங்கினால் ஆஸ்துமா மற்றும் கடுமையான சுவாசப் பிரச்சினைகள் குணமாகும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
சைவம் சாப்பிடுபவர்களுக்கு இந்த மூலிகை மருந்து வெல்லத்துடன் கலந்து தரப்படுகிறது. அறிவியல் ரீதியாக இதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனச் சில அமைப்புகள் கேள்வி எழுப்பினாலும், மக்களின் கூட்டம் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது.
