உடல்நலக் குறைபாட்டிற்கு மருத்துவரை அணுகுவதற்குப் பதிலாக, செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட் அளித்த ஆலோசனையின்படி மருந்துகளை உட்கொண்ட 45 வயது நபர், அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த 45 வயது நபர் ஒருவருக்கு பரிசோதனையில் எச்.ஐ.வி (HIV) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து அதிர்ச்சியடைந்த அவர், தகுந்த மருத்துவ நிபுணர்களை அணுகி சிகிச்சை பெறுவதற்குப் பதிலாக, இணையதளத்தில் உள்ள ‘ஏஐ சாட்போட்’ (AI Chatbot) மூலம் சிகிச்சை முறைகளைத் தேடியுள்ளார்.
அப்போது அந்தச் செயற்கை நுண்ணறிவு கருவி, ‘PrEP’ (Pre-Exposure Prophylaxis) எனப்படும் மருந்துகளை உட்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளது. பொதுவாக இம்மருந்துகள் எச்.ஐ.வி தொற்று இல்லாதவர்கள், அத்தொற்று வராமல் தடுப்பதற்காக எடுத்துக் கொள்ளப்படுபவை. ஏற்கனவே தொற்று பாதிப்புக்குள்ளான ஒருவருக்கு இது சரியான சிகிச்சை முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
முறையான மருத்துவக் கண்காணிப்பு இன்றி, தவறான அளவில் அந்த மருந்துகளை உட்கொண்டதால், அவருக்கு ‘ஸ்டீவன்ஸ்-ஜான்சன் சிண்ட்ரோம்’ (Stevens-Johnson Syndrome) என்ற அரிய வகை தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டு, தோல் உரிந்து அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமானது.
தற்போது அவர் டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் (RML Hospital) தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடி வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து மருத்துவ நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். “செயற்கை நுண்ணறிவு கருவிகள் பொதுவான தகவல்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டவை. அவை ஒருபோதும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களுக்கு மாற்றாக முடியாது. இணையதளத் தகவல்களை நம்பி சுயமாக மருந்து எடுத்துக் கொள்வது மரணத்தில் முடியக்கூடும்,” என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
