உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், மும்பையைச் சேர்ந்த பிரியா ஷெட்டி என்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது காதலன், காதலனின் மனைவி மற்றும் மாமனார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ள தகவல்கள் வருமாறு:
குற்றம் சாட்டப்பட்ட விஜய் குமார் சாஹ்னி, கடந்த 2012-ஆம் ஆண்டு மும்பையில் தங்கியிருந்தபோது பிரியா ஷெட்டியைச் சந்தித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகன் உள்ளான். இதற்கிடையே, கடந்த 2014-ஆம் ஆண்டு குடும்பத்தாரின் வற்புறுத்தலால் கோரக்பூரைச் சேர்ந்த சந்தியா என்பவரை விஜய் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு விஜய் குமாருக்கு பிரியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். மேலும், விஜய்யின் முதல் மனைவியை விட்டுவிடுமாறும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் விஜய்க்கும் பிரியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று, விஜய் தனது மனைவி சந்தியா மற்றும் பிரியாவுடன் மும்பையில் இருந்து கோரக்பூருக்கு வந்துள்ளார்.
கடந்த ஜனவரி 29-ஆம் தேதி இரவு, விஜய்யும் அவரது மனைவி சந்தியாவும் சேர்ந்து பிரியாவை மது அருந்த வைத்துள்ளனர். பின்னர் கனமான பொருளால் பிரியாவின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளனர். இதில் மயக்கமடைந்த பிரியாவை ஸ்கூட்டரில் ஏற்றிச் சென்று, பைர்கட்டா கிராமம் அருகே உள்ள சாலையோரத்தில் வீசியுள்ளனர்.
அப்போது பிரியா உயிருடன் இருப்பதை உணர்ந்த அவர்கள், கொடூரமாக அவரது முகத்தையும் தலையையும் நசுக்கிச் சிதைத்துள்ளனர். அடையாளத்தை மறைப்பதற்காக அவரது ஆடைகளையும் அகற்றிவிட்டு தப்பியோடினர்.
ஜனவரி 30-ஆம் தேதி காலை அந்த வழியாகச் சென்றவர்கள் சடலத்தைப் பார்த்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் குழுவினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் விஜய்யின் தொடர்பு உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விஜய் குமார் சாஹ்னி, அவரது மனைவி சந்தியா மற்றும் இதற்குத் துணையாக இருந்த விஜய்யின் தந்தை (மாமனார்) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
