மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடையாக இருந்த 6 வயது மகளை, கால்வாயில் தள்ளி கொலை செய்த தந்தையையும், அவருக்கு உடந்தையாக இருந்த பஞ்சாயத்து தலைவரையும் போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் கேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங் (28). முடிதிருத்தும் நிலையம் நடத்தி வரும் இவருக்கு ஒரு மகனும், 6 வயதில் இரட்டை பெண் குழந்தைகளும் உள்ளனர். வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் பாண்டுரங் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், மகாராஷ்டிர பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி, இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதி உள்ளது. இதனால் தனது மூன்றாவது குழந்தையால் தேர்தலில் போட்டியிட முடியாதோ என்ற கவலை பாண்டுரங்கிற்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது நண்பரும், தற்போதைய கிராம பஞ்சாயத்துத் தலைவருமான கணேஷ் ஷிண்டே என்பவரிடம் பாண்டுரங் ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது, மூன்றாவது குழந்தையை ‘இல்லாமல்’ செய்தால் தேர்தலில் போட்டியிடலாம் என கணேஷ் கொடூரமான ஆலோசனையை வழங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த ஆலோசனையை ஏற்று தனது 6 வயது மகள் பிராச்சியைக் கொலை செய்ய பாண்டுரங் முடிவு செய்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மகள் பிராச்சியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்திற்குப் பாண்டுரங் சென்றுள்ளார். அங்குள்ள நிஜாம்சாகர் கால்வாய்க்கு மகளைக் கூட்டிச் சென்று, யாரும் பார்க்காத நேரத்தில் அவளைக் கால்வாயில் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சிறுமியின் உடல் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, போலீசார் விசாரணையைத் தொடங்கினர். சிறுமியின் அடையாளத்தை உறுதி செய்த போலீசார், மகாராஷ்டிராவிற்குச் சென்று பாண்டுரங்கிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
முதலில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய பாண்டுரங், பின்னர் அரசியல் பதவிக்காகத் தனது மகளைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பாண்டுரங் மற்றும் அவருக்குச் சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த பஞ்சாயத்துத் தலைவர் கணேஷ் ஷிண்டே ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பதவி ஆசைக்காகப் பெற்ற மகளையே தந்தை பலிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
