டெல்லியில், 14 வயது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தனது தங்கையின் பாதுகாப்பிற்கு ஆபத்து வரும் எனக் கருதி அச்சத்தைத் தூக்கியெறிந்து அச்சிறுமி அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வசித்து வரும் எட்டாம் வகுப்பு படிக்கும்ச் காவல் நிலையத்திற்கு வந்து புகார் ஒன்றை அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: “எனது தாயார் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பீகாரில் உள்ள எங்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். அவர் சென்றது முதல் எனது தந்தை என்னைத் துன்புறுத்தத் தொடங்கினார். கடந்த ஜனவரி 31-ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில், நான் எனது தங்கை மற்றும் தந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, தந்தை என்னைக் கட்டாயப்படுத்திப் பாலியல் வன்கொடுமை செய்தார். நான் எதிர்த்தபோது என்னைக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்.”
மேலும் அச்சிறுமி போலீசாரிடம் கூறுகையில், “கடந்த 15 நாட்களில் மட்டும் 4 முதல் 5 முறை தந்தை என்னிடம் தவறாக நடந்துள்ளார். இதற்கு முன்பு பலமுறை என்னையும் எனது தாயையும் தந்தை கொடூரமாக அடித்துள்ளதால், பயத்தில் நான் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், நான் அமைதியாக இருந்தால் எனது தங்கையின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகிவிடும் என்பதால், இப்போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு புகாரளிக்க வந்துள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கெனத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதோடு, நீதிமன்றத்தின் மூலம் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களைச் சேகரித்தனர். தலைமறைவாக இருந்த தந்தையைக் கைது செய்து விசாரணை நடத்தியபோது, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். “யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன்” என மகளை மிரட்டியதையும் அவர் ஒப்புக்கொண்டார். மேலும் இந்தச் சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
