உல்லாஸ்நகரில் பெண் ஒருவரின் மொட்டையடிக்கப்பட்டு, செருப்பு மாலை அணிவித்து வீதியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் இன்னும் தணியாத நிலையில், சனிக்கிழமை மாலை கல்யாண் ரயில்வே யார்டில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதாவது ரயிலுக்காகக் காத்திருந்தபோது சிறுமியின் மொபைல் போனைப் பறித்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி இந்த கொடூரச் செயலை ஒரு இளைஞன் அரங்கேற்றியுள்ளான். சௌரவ் சோனாவானே (23) என்ற அந்த இளைஞனை ரயில்வே போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர். நீதிமன்றம் அவனுக்கு மே 21 வரை போலீஸ் காவல் விதித்துள்ளது.
அதாவது அந்த சிறுமி, தனது மாமாவைச் சந்திப்பதற்காக சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கல்யாண் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து கோபோலி செல்வதற்காக ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்தபோது, அங்கிருந்த சௌரவ் சோனாவானே சிறுமியின் கையில் இருந்த மொபைல் போனை வலுக்கட்டாயமாகப் பறித்துள்ளான். சிறுமி சத்தம் போடவே, “உனக்கு மொபைல் போன் வேண்டும் என்றால் போலீஸ் நிலையத்திற்கு வா” என்று மிரட்டியுள்ளான். பயந்துபோன அந்த சிறுமி, அவன் போலீஸ் நிலையத்திற்குத்தான் அழைத்துச் செல்கிறான் என்று நம்பி அவனது பின்னாடியே சென்றுள்ளார்.
ரயில் நிலையத்தின் கூட்ட நெரிசல் மற்றும் இளைஞனின் மிரட்டலால் செய்வதறியாது திகைத்த சிறுமி, வேறு வழியின்றி அவனுடன் சென்றுள்ளார். ஆனால், அந்த காமுகன் சிறுமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, ஆள் நடமாட்டமில்லாத பாழடைந்த பகுதிக்கு அழைத்துச் சென்று, அவளது நிலையைப் பயன்படுத்தி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
பின்னர் சிறுமியை அங்கேயே தவிக்க விட்டுவிட்டு சௌரவ் தப்பியோடிவிட்டான். அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்துபோன அந்த சிறுமி, எப்படியோ அங்கிருந்து தப்பித்து அழுதுகொண்டே ரயில்வே போலீஸ் நிலையத்தை அடைந்து தனக்கு நேர்ந்த கொடூரத்தைக் கூறியுள்ளார். இதையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், கல்யாண் கிழக்கு பகுதியில் மறைந்திருந்த சௌரவ் சோனாவானேவை சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
