மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள உரூளி காஞ்சன் பகுதியில், ஆண் வாரிசு பிறக்கவில்லை என்ற வக்கிரமான காரணத்திற்காக, 24 வயதுடைய தனது இளம் மனைவி மீது கணவன் ஆசிட் ஊற்றி சித்திரவதை செய்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்ததால், கணவன் மற்றும் மாமியார் வீட்டாரால் அவர் தொடர்ந்து கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு வந்துள்ளார். குடும்பச் சூழ்நிலை காரணமாக அந்தப் பெண் வேலைக்குச் சென்று வந்த நிலையில், அவரது நடத்தையின் மீதும் கணவன் தொடர்ந்து சந்தேகம் கொண்டு, வீட்டில் தினமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி இரவு, கணவன் சௌரவ் சோனாவானே குடிப்போதையில் வீட்டிற்கு வந்து, மனைவியின் நடத்தை குறித்து அவதூறாகப் பேசி தகராறு செய்துள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றவே, மனைவியை சரமாரியாக உதைத்துத் தாக்கியதோடு, வீட்டில் இருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து வந்து, அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பில் ஊற்றியுள்ளார். இதனால் அந்தப் பெண் வலியால் அலறித் துடித்தபடி வீட்டை விட்டு வெளியே ஓட முயன்றபோது, அவரைத் தடுத்து, வீட்டின் கதவை வெளிப்புறமாகப் பூட்டி சிறை வைத்துள்ளார். மேலும், இக்கொடூரம் வெளியில் தெரிந்தால் போலீசில் சிக்கிவிடுவோம் என்ற பயத்தில், படுகாயமடைந்த மனைவிக்கு எந்தவித மருத்துவ சிகிச்சையும் அளிக்காமல், சுமார் 15 நாட்கள் அவரை வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்துள்ளார்.

நாட்கள் செல்லச் செல்ல அந்தப் பெண்ணின் காயங்கள் சீழ் பிடித்து, அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. இதையடுத்து, 15 நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண் எப்படியோ கணவனின் பிடியில் இருந்து தப்பித்து, தனது பெற்றோருக்குத் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெற்றோர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மகளை மீட்டு உரூளி காஞ்சனில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலை முயற்சி, குடும்ப வன்முறை மற்றும் ஆசிட் வீச்சு ஆகிய கடுமையான பிரிவுகளின் கீழ்  கணவனைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.