உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், தனது 11 வயதுடைய இரட்டைப் பெண் குழந்தைகளைக் கொடூரமாகக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, தற்போது சிறை வளாகத்திற்குள்ளேயே தனது  கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த மருத்துவப் பிரதிநிதியான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது இரட்டை மகள்களான ரித்தி மற்றும் சித்தி ஆகிய இருவரையும் வீட்டில் வைத்துத் துடிதுடிக்கக் கொலை செய்தார். இக்கொடூரம் குறித்துப் பிள்ளைகளின் தாய் ரேஷ்மா அளித்த புகாரின் பேரில், சசி ரஞ்சன் மிஸ்ராவைக் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.

காதல் திருமணம் செய்துகொண்ட சசி ரஞ்சன், தனது சொந்த மகள்களை ஏன் இவ்வளவு கொடூரமாகக் கொலை செய்தார் என்பதற்கான காரணத்தை போலீசாரிடம் கூறாமல் இறுதிவரை மவுனம் காத்து வந்தார். மேலும், அவர் வீட்டில் தங்கியிருந்த அறையில் 5 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததும், அந்த அறைக்குள் அவரது மனைவி நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மர்மமான கேமராக்கள் எதற்காகப் பொருத்தப்பட்டன என்ற ரகசியமும் இதுவரை விலகவில்லை. இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசி ரஞ்சன், திடீரென தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சிறை வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரைக் கண்ட சிறைக்காவலர்கள், உடனடியாக அவரை மீட்டு பலத்த பாதுகாப்புடன் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது சொந்தக் குடும்பத்தையே அழித்துவிட்டு, குற்ற உணர்ச்சியால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்தாரா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் மர்மம் உள்ளதா என்பது குறித்து கான்பூர் சிறைத்துறை அதிகாரிகளும், போலீசாரும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.