ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே டெலிவரி கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், பெரிய பார்சல் என்ற பெயரில் பெண் வாடிக்கையாளரிடம் டெலிவரி ஊழியர் ஒருவர் கூடுதல் பணம் கேட்டு மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வரும் அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது வீட்டு பால்கனியிலிருந்து, வாசலில் நின்ற டெலிவரி ஊழியரிடம் என்ன வேண்டும் எனக் கேட்கிறார். அதற்கு அந்த ஊழியர், “பெரிய பார்சலை டெலிவரி செய்வதற்கு தனியாக 20 ரூபாய் கொடுக்க வேண்டும்” என்று கறாராகக் கூறுகிறார். அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், “பணம் தராவிட்டால் பார்சலைத் தரமாட்டீர்களா?” எனக் கேட்க, அதற்கு அந்த ஊழியர் சற்றும் தயங்காமல், “சிறிய பார்சல் என்றால் கொடுத்துவிடுவேன், பெரிய பார்சலுக்கு கூடுதல் பணம் கொடுத்தே தீர வேண்டும். இல்லையெனில் அடுத்த முறை உங்கள் பார்சல்களை எடுத்து வரமாட்டேன்” என்கிறார்.

சம்பத்தப்பட்ட நிறுவனத்தில் புகார் அளிப்பேன் என அந்தப் பெண் எச்சரித்தபோதும், சிறிதும் பயப்படாத அந்த ஊழியர், “தாராளமாகப் புகார் அளியுங்கள்” என்று எகத்தாளமாகப் பேசியதுடன், தனது பெயரையும் கூறிவிட்டு, “என் போன் நம்பரும் வேண்டுமா?” என திமிராகக் கேட்கிறார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ‘மீஷோ’ (Meesho)-வை டேக் செய்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும்  முழுத் தொகையையும் செலுத்திய பிறகும் வாடிக்கையாளர்களிடம் இப்படி நடக்கும் பகல் கொள்ளையைத் தடுக்க நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.