இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒரு நாள் விடுமுறை எடுப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் நிலையில், 10 நாட்கள் விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பிய ஊழியருக்கு, மேலும் ஒரு நாள் ஓய்வெடுக்குமாறு பாஸ் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

மருத்துவ விடுப்பு எடுத்தால் கூட மருந்து பில்களையும், சான்றிதழ்களையும் கேட்கும் தற்போதைய ‘நச்சு’ (Toxic) வேலைச் சூழலுக்கு மத்தியில், விதிவிலக்காக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ரெடிட் சமூக வலைதளப் பக்கத்தில் ஊழியர் ஒருவரால் பகிரப்பட்ட வாட்ஸ்அப் உரையாடலில், விடுமுறை முடிந்து பெங்களூரு திரும்பிய ஊழியர், “ஹலோ பாஸ், நான் பெங்களூரு வந்துவிட்டேன். நாளை முதல் பணிக்குத் திரும்புகிறேன்” என்று மெசேஜ் செய்துள்ளார். அதற்கு அந்த அதிகாரி, “மிக நன்று, ஆனால் நீ நாளைய தினத்தையும் விடுமுறையாக எடுத்துக்கொள். வீட்டில் பொறுமையாக செட்டிலாகிவிட்டு, புதன்கிழமை முதல் வேலைக்கு வா” என்று பதில் அளித்துள்ளார்.

அதிகாரியின் இந்த கனிவான பதிலால் நெகிழ்ந்துபோன ஊழியர், நிறுவனத்திற்கு தன் மீதான அக்கறை புரிந்ததாகக் கூறி நன்றி தெரிவித்துள்ளார். நீண்ட விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பும்போது ஏற்படும் மன அழுத்தத்தை இந்த ஒரு மெசேஜ் போக்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போஸ்ட் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, “இப்படி ஒரு பாஸ் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்”, “உங்கள் நிறுவனத்தில் வேலை காலியிடம் உள்ளதா?” என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.