மகாராஷ்டிர மாநிலம் பல்கர் மாவட்டத்தின் போய்சர் பகுதியில், 70 வயது முதியவர் ஒருவர் வேகமாக வந்த லாரியின் அடியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி (CCTV) வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.

போய்சர்-தாராப்பூர் சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) கிளை அருகே சலீம் அப்சல் இந்த்ராஜி என்ற 70 வயது முதியவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அவ்வழியே வந்த லாரியின் பின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

முதலில் இது ஒரு சாதாரண விபத்து என்று நினைக்கப்பட்ட நிலையில், அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் இணையத்தில் வைரலாகி தற்பொழுது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது; ஏனெனில் அந்த வீடியோவில், முராதாபாத் சம்பவங்களைப் போல முதியவர் வேண்டுமென்றே ஓடிவந்து லாரியின் அடியில் பாய்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்த விபரீத சம்பவத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போய்சர் போலீசார், முதியவரின் உடலைக் கைப்பற்றி தாராப்பூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்ததோடு, லாரி ஓட்டுநரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்கர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் கனரக வாகனங்களால் பிராப்தி பிரவின் ஜாதவ் மற்றும் டாக்டர் விஷ்ணுபிரபா என்ற இரண்டு இளம்பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதால், அப்பகுதி மக்கள் தற்பொழுது கடும் கொந்தளிப்பில் ஈடுபட்டுள்ளதோடு, குடியிருப்புப் பகுதிகளில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கக் கோரி போக்குவரத்து போலீசாரிடம் அதிரடியாக முறையிட்டு வருகின்றனர்.

நெஞ்சை பதறவைக்கும் இந்த முதியவரின் வைரல் விபத்து வீடியோ தற்பொழுது நெட்டிசன்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.