உத்தரப் பிரதேச மாநிலத்தில், தேனிலவு பயணத்தின் போது தனது அனுமதியின்றி பெற்றோரை உடன் அழைத்து வந்த கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ள வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தேனிலவுக்காகத் தனது மனைவியை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கணவர் உறுதியளித்திருந்த நிலையில், அதன்படி துபாய் நாட்டிற்குச் செல்ல விமான டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த அந்தப் பெண், துபாய் விமான நிலையம் சென்றடைந்த பின்னரே, தங்களோடு கணவரின் பெற்றோரும் (மாமனார், மாமியார்) தேனிலவு பயணத்தில் இணைந்து வரவிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
கணவரிடம் இதுகுறித்து அவர் கேட்டபோது, தன் தாயாருக்கு உடல்நலம் சரியில்லாததால் துபாய்க்கு உடன் அழைத்து வந்ததாகக் கணவர் தரப்பில் மழுப்பலான பதில் அளிக்கப்பட்டுள்ளது. தேனிலவு பயணத்தின் போது தனிமை கிடைக்காமல், மாமியார் மற்றும் மாமனாருடன் துபாயின் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல வேண்டியிருந்ததால் அந்தப் பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் துபாயில் இருந்து இந்தியா திரும்பிய உடனே, கணவர் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி அவருடன் வாழ மறுத்துத் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். தற்போது, தம்பதியரிடையே ஏற்பட்ட இந்தத் தேனிலவுப் பஞ்சாயத்து குடும்ப நல நீதிமன்றத்தின் கீழ் இயங்கும் கவுன்சிலிங் மையத்திற்குச் சென்றுள்ளது. அங்கு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததால், அந்தப் பெண் விவாகரத்து கோரி சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
