கேரளாவில் ஆற்றில் மூழ்கிய தாய் மற்றும் அவரது குழந்தையைக் காப்பாற்றி, தனது உயிரைத் தியாகம் செய்த கடற்படை வீரர் விஷ்ணு உன்னி அவர்களின் வீரத்தைப் போற்றும் வகையில், அவரது சொந்த ஊரான திருத்தலா கிராம பஞ்சாயத்தில் உள்ள ஒரு புதிய சாலைக்கு ‘நாவிகன் விஷ்ணு சாலை’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலத்தின் மீது நின்றபடி ஆற்றின் அழகை ரசித்துக் கொண்டிருந்த ஒரு தாயும், அவரது சிறுமியான மகளும் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்தனர்.
அவர்கள் நீரில் மூழ்கி உயிருக்காகப் போராடுவதைக் கண்ட கடற்படை வீரர் விஷ்ணு உன்னி, சற்றும் யோசிக்காமல் ஆற்றில் குதித்து அவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டெடுத்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவசர நீரோட்டத்தில் சிக்கிய அவரால் கரை திரும்ப முடியாமல் போனதால், நீரில் மூழ்கி தனது இன்னுயிரைத் தியாகம் செய்தார்.
மக்களின் உயிரைக் காக்கத் தன் உயிரைப் பணைய வைத்து வீரமரணமடைந்த இந்த இளம் கடற்படை வீரரின் தியாகத்தைப் பாராட்டும் விதமாக, கேரள அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் இணைந்து இந்தச் சிறப்பு மரியாதையைச் செய்துள்ளது. அவர் வசித்த பகுதியின் முக்கிய இணைப்புச் சாலையாகக் கருதப்படும் புதிய சாலைக்கு அந்த வீரரின் பெயர் முறைப்படி சூட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்தத் திறப்பு விழாவில் அவரது குடும்பத்தினர், கடற்படை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு, கண்ணீர் மல்க அவருக்குத் தங்களது வீரவணக்கத்தையும், நெகிழ்ச்சியான நன்றியையும் செலுத்தினர். மரணத்திற்குப் பின் இவருக்கு ‘ஜீவன் ரக்ஷா பதக்கம்’ மற்றும் ‘நாவோ சேனா பதக்கம்’ ஆகிய உயரிய விருதுகளும் வழங்கிக் கவுரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
