“இரண்டரை கோடி ரூபாய் காரில் வந்து, 45 ரூபாய் பூந்தொட்டியைத் திருடிச் செல்கிறார்கள்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் ஒரு விழாவில் ஆதங்கப்பட்டிருந்த நிலையில், அதேபோன்ற ஒரு வினோதத் திருட்டுச் சம்பவம் மும்பை டோம்பிவிலி பகுதியில் நடந்துள்ளது. விடியற்காலையில் ஸ்கூட்டரில் வந்த ஒரு ஜோடி, அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by NDTV India (@ndtvindia)

மும்பையில் உள்ள சீமென்ஸ் சொசைட்டி குடியிருப்பு வாசலில், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளைத் தனித்தனியாகச் சேகரிப்பதற்காக சக்கரங்கள் பொருத்தப்பட்ட சிறப்பு குப்பைத் தொட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு சுமார் 3,000 ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி அளவில் ஸ்கூட்டரில் ஒரு பெண் வர, அவருக்குப் பின்னால் ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார். குடியிருப்பு வாசலில் ஸ்கூட்டரை நிறுத்தியவுடன், பின்னால் இருந்த வாலிபர் இறங்கி, அங்கிருந்த குப்பைத் தொட்டியைத் திருடிக்கொண்டு ஸ்கூட்டரிலேயே தப்பியோடினார்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த பிரத்யேகக் குப்பைத் தொட்டிகளைப் பழைய இரும்புக்கடையிலோ அல்லது செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டிலோ விற்பனை செய்வதற்காக இந்த ஜோடி திருடியிருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே லக்னோவில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு, சாலையை அழகுபடுத்த வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான பூந்தொட்டிகளைப் பொதுமக்கள் போட்டிப்போட்டுத் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது மும்பையில் குப்பைத் தொட்டி திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.