மும்பை சாந்தாகுரூஸ் இரயில் நிலைய மேம்பாலத்தில் நின்றுகொண்டு, கீழே உள்ள இரயில் தண்டவாளத்தில் நபர் ஒருவர் சிறுநீர் கழித்த அருவருக்கத்தக்க வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மும்பை புறநகர் இரயில் நிலையங்கள் மற்றும் லோக்கல் இரயில்களில் நடக்கும் விசித்திரமான சம்பவங்களின் வீடியோக்கள் அடிக்கடி வெளியாவது வழக்கம். அந்த வகையில், தற்போது சாந்தாகுரூஸ் இரயில் நிலையத்தின் எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு) அருகில் உள்ள மேம்பாலத்தில் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர், அங்கிருந்தபடியே கீழே உள்ள இரயில் தண்டவாளத்தை நோக்கிச் சிறுநீர் கழித்துள்ளார். இதனால், அதற்குக் கீழே இருந்த இரயில் நிலைய நடைமேடையின் கூரையிலிருந்து சிறுநீர் சொட்டத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு நடந்து சென்ற பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
Mumbai 🚨
Santa Cruz railway station ke overpass se ek aadmi ka railway tracks par urinate karte video viral ho raha hai.
Aadmi ne allegedly medical urgency ka reason diya, lekin social media par public hygiene ko lekar debate chhed gayi hai.#Mumbai #ViralVideo #CivicSense pic.twitter.com/RRKP2ZeK1K— Trending Topics with Faiz (@newswithaftab14) June 7, 2026
அவ்வழியாகச் சென்ற பயணி ஒருவர், இந்த அநாகரிகச் செயலைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்ததுடன், “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று அவரிடம் தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், தனக்குச் சர்க்கரை நோய் இருப்பதாகக் கூறி சாதாரணமாக மழுப்பியுள்ளார். இந்தச் சம்பவம் நடந்தபோது அந்த மேம்பாலத்தில் ஏராளமான பயணிகள் நடமாடிக் கொண்டிருந்தபோதிலும், யாரும் அதனைத் தட்டிக்கேட்கவோ அல்லது இரயில்வே போலீஸாரிடம் புகார் அளிக்கவோ முன்வரவில்லை என்பதுதான் இதில் உச்சக்கட்ட அதிர்ச்சியாகும்.
எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், பொது இடங்களை இப்படி அசுத்தம் செய்யும் நபர்கள் மீது இரயில்வே நிர்வாகமும் போலீஸாரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். “சர்க்கரை நோய் இருந்தால் பொது இடத்தில் இப்படித்தான் அநாகரிகமாக நடப்பதா? இவர்களுக்குச் சட்டத்தின் மீதோ, பொது சுகாதாரத்தின் மீதோ பயமே இல்லையா?” என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனக் கணைகளைத் தொடுத்து வருகின்றனர்.
