மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். மதுரையின் சாலைகள், குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை வசதிகள் மிகவும் மோசமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், வளர்ச்சி குறித்து கேள்வி கேட்டால் திமுகவினர் தங்கள் குடும்பப் பாரம்பரியத்தைப் பற்றிப் பேசுகிறார்களே தவிர, தீர்வைச் சொல்லவில்லை என்று விமர்சித்தார்.
மேலும், மதுரையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் அதிகாரத் தோரணையில் இருப்பதாகக் குற்றம் சாட்டிய அண்ணாமலை, மேடையில் இருந்த மாவட்ட ஆட்சியரை ஓர் அமைச்சர் ஒருமையில் பேசி வெளியேறச் சொன்னதாகப் பகீர் புகாரைக் கிளப்பினார். குறிப்பாக, உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியின் நண்பர்கள் ஜல்லிக்கட்டுப் பார்ப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் தனது இருக்கையை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை மதுரையில் ஏற்பட்டுள்ளதாகவும், இது அதிகார துஷ்பிரயோகம் என்றும் அவர் ஆவேசமாகப் பேசினார்.
