மத்திய பாஜக அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார். உக்ரைன் போரை நிறுத்தியதாகப் பீற்றிக் கொள்ளும் பிரதமர் மோடி, அண்டை நாடான இலங்கை அரசு தமிழக மீனவர்களைச் சிறைபிடிக்கும்போது மட்டும் ஏன் ‘மௌன குரு’வாக மாறுகிறார் என்று கேள்வி எழுப்பினார். தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக மத்திய அரசு கருதுகிறதா இல்லையா என்றும் அவர் ஆவேசமாக வினவினார்.
கட்சத்தீவை மீட்கவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முதல்வர் குற்றம் சாட்டினார். பாஜகவின் தமிழகப் பாசம் என்பது வெறும் தேர்தல் காலத்து ‘அரசியல் ஸ்டண்ட்’ மட்டுமே என்று விமர்சித்த அவர், இலங்கை ஒப்பந்தத்தை மீளாய்வு செய்து கட்சத்தீவை மீட்கத் திமுக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று உறுதியளித்தார்.
