தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் திமுக அரசு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், திமுக அரசு திறமையற்ற மற்றும் மிக மோசமான ஆட்சியை நடத்தி வருவதாகவும், தமிழக மக்களிடையே அந்த அரசு செல்வாக்கை இழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்கும் கருத்துக்கள் தமிழ் கலாசாரத்திற்கும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் எதிரானது என்று அவர் குற்றம் சாட்டினார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஒரு குழப்பமான நிலையில் இருப்பதாகவும், அவர்கள் திமுகவுடன் நீடிப்பதா அல்லது தவெக பக்கம் செல்வதா என்ற இரட்டை நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்துப் பேசிய பியூஸ் கோயல், வெறும் ரசிகர் மன்றங்களை மட்டும் வைத்துக்கொண்டு தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று கூறினார். சினிமாவில் இருந்து பல நட்சத்திரங்கள் வருவார்கள், போவார்கள்; விஜய் சில வாக்குகளைப் பிரிக்கலாமே தவிர, அவரால் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்பது அவரது கருத்தாக இருந்தது.

மேலும், விஜய்யை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும், அது தொடர்பாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். திமுக கூட்டணியில் நிலவும் ஒற்றுமையின்மையால் அதிமுக – பாஜக கூட்டணி எளிதில் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.