அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் ஃபெடெக்ஸ் (FedEx) நிறுவனத்தில் பணிபுரியும் அமிதிஸ்ட் ப்ளூம்பெர்க் என்ற பெண்ணுக்கு, தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் பணியின் போதே திடீரென குழந்தை பிறந்துள்ள ஆச்சரியமான சம்பவம் நடந்துள்ளது. வழக்கமாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் மாற்றங்களோ அல்லது எடையோ அவருக்கு அதிகரிக்காத நிலையில், ஒருநாள் காலை வேலையை முடிக்கும் தருவாயில் ஏற்பட்ட திடீர் வலியால் கழிவறைக்குச் சென்றபோதுதான் பிரசவம் நிகழப்போவதை அவர் உணர்ந்துள்ளார்.

விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் அவருக்கு உதவி செய்த நிலையில், மூன்று கிலோ எடையுடன் ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது; அந்தப் பெண் தனது குழந்தைக்கு ஓனிக்ஸ் கிங் ஈஸ்டர்லி என்று பெயரிட்டு மகிழ்ந்தார். இதுபோன்ற விசித்திரமான நிகழ்வுகள் மருத்துவ உலகில் ‘மறைமுகக் கர்ப்பம்’ (Cryptic Pregnancy) என்று அழைக்கப்படுகின்றன, இதில் பிரசவ வலி ஏற்படும் வரை தாய்மார்களுக்குத் தாங்கள் கருவுற்றிருப்பதே தெரியாமல் போய்விடும்.

முன்னதாக ஒரு குழந்தைக்குத் தாயான அமிதிஸ்டிற்கு, முதல் பிரசவத்தில் அனைத்து அறிகுறிகளும் தெரிந்த நிலையில், இந்த முறை உடல் எடை குறையவே செய்ததால் அவரால் இதைக் கணிக்க முடியவில்லை. இதேபோல் அண்மையில் இல்லினாய்ஸ் மாகாணத்திலும் ஒரு பெண் சாதாரண வயிற்று வலி என நினைத்து மருத்துவமனை சென்றபோது, அவர் ஒன்பது மாத கர்ப்பிணி எனத் தெரியவந்து குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.