அமெரிக்கத் தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள், அவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்ட பிறகும் ஓயாமல் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது வெளியிடப்பட்டுள்ள லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட புதிய ஆவணங்களில், உலகப் புகழ்பெற்ற பல முக்கியப் பிரமுகர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆவணங்களில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்களான எலான் மஸ்க், பில் கேட்ஸ் மற்றும் பிரபல எழுத்தாளர் மீரா நாயர் உள்ளிட்டோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக, பில் கேட்ஸ் ரஷ்யப் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதன் விளைவாகப் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றதாகவும் இந்த புதிய கோப்புகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன.

​இவை அனைத்தையும் விடப் பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஆண்ட்ரூ தொடர்பான புகைப்படங்கள் உலகையே முகம் சுளிக்க வைத்துள்ளன. தரைப்பகுதியில் பெண் ஒருவருடன் அவர் தகாத நிலையில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் பல பெண்களின் மடியில் அவர் படுத்திருப்பது போன்ற காட்சிகள் வெளியாகிப் பிரிட்டன் அரச குடும்பத்திற்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளன.

ஏற்கனவே இத்தகைய பாலியல் புகார்களால் தனது இளவரசர் மற்றும் ‘டியூக் ஆஃப் யார்க்’ ஆகிய அரச பட்டங்களை ஆண்ட்ரூ இழந்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த நேரடி ஆதாரங்கள் அவருக்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்துள்ளன. எப்ஸ்டீன் மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற இந்த ரகசிய ஆவணங்கள் உலகின் பல அதிகாரமிக்க மனிதர்களின் முகத்திரையைக் கிழித்து வருகின்றன.