ஈரானின் கடற்படை ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பலான ‘பாக்ய லக்ஷ்மி’யை எச்சரித்துத் திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக, ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை இந்த முக்கிய கடல்வழிப் பாதையைத் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

இந்தச் சூழலில், அமீரகத்திலிருந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த பாக்ய லக்ஷ்மி கப்பலை வழிமறித்த ஈரானிய கடற்படை, “உடனடியாகத் திரும்பிச் செல்லுங்கள்” என்று வானொலி மூலம் எச்சரிக்கை விடுத்தது. மோதலைத் தவிர்க்க விரும்பிய இந்தியக் கப்பலின் ஊழியர்கள், அந்த உத்தரவை ஏற்று உடனடியாகக் கப்பலைத் திருப்பி பாதுகாப்பான இடத்திற்குச் சென்றனர்.

“>

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் ஈரானியத் தூதரை நேரில் அழைத்துத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. சர்வதேச கடல்வழிப் போக்குவரத்து மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மேலும் பாக்ய லக்ஷ்மி மட்டுமல்லாமல் ‘சன்மார் ஹெரால்டு’ போன்ற மற்ற இந்தியக் கப்பல்களும் இதுபோன்ற அச்சுறுத்தல்களைச் சந்தித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலையில் இந்திய ஊழியர்களுக்குப் பாதிப்பு ஏதுமில்லை என்றாலும், உலகப் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான இந்த நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.